
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tirunelveli#280694
திருநெல்வேலி: ஆற்றுமணல் கடத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை என்ற கேரள ஐகோர்ட் தீர்ப்பை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நெல்லையில் நடந்த இயற்கை வளப்பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.நெல்லையில் தமிழ்நாடு சின்பேடு கூட்டமைப்பு, பாளை. தீபம், ராதாபுரம் கிராமிய கல்வி மேம்பாட்டு நிறுவனம், பாவூர்சத்திரம் மக்கள் கல்வி நிறுவனம், வாசுதேவநல்லூர் மன்னா அறக்கட்டளை, தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இயற்கை வளப்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தலைவர் காஜாமுகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட நிலத்தடிநீர், குளங்கள் பாதகாப்பு செயலாளர் முத்துசாமி, ராதாபுரம் கிராமிய கல்வி மேம்பாட்டு நிறுவன இயக்குநர் முத்துநாயகம், தமிழ் வளர்ச்சிப்பண்பாட்டு மையத்தை சேர்ந்த போத்திராஜ் முன்னிலை வகித்தனர்.தீபம் இயக்குநர் பால்ராஜ் வரவேற்றார். வேம்பார் சின்பேடு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் கருத்தரங்கு நோக்கம் குறித்து பேசினார். சின்பேடு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ராஜேந்திர பிரசாத், மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணபதி, ம.தி.தா. இந்து கல்லூரி தாமிரபரணி பாசன கால்வாய் ஆராய்ச்சியாளர் சண்முகவேல், வான்முகில் மாரியப்பன், மக்கள் மன்ற துணைத்தலைவர் சுந்தர்ராஜன், மக்கள் கண்காணிப்பகம் கணேசன், இயற்கைவள பாதுகாப்பு ஆர்வலர் லட்சுமணன் உட்பட பலர் பேசினர்.
ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடிநீர், குடிநீர் ஆதாரம் குறைகிறது, மீன்கள் முட்டையிட முடியாமல் மீன்வளம் பாதிக்கப்படுவதால் ஆற்றில் மணல் அள்ள தடை விதிப்பது, ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுப்பது, ஆற்றங்கரையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் ஆலைகள் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட் ஆணையை தீவிரமாக செயல்படுத்துவது, பழைய கால்வாய்களை தூர் எடுப்பது, கால்வாய் ஆக்ரமிப்புக்களை உடனே அகற்றுவது, மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை குளத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுப்பது, நகரங்களில் குவியும் கழிவு, குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுப்பது, மழைக்காலங்களில் வீணாகும் வெள்ள நீரை பயன்படுத்த புதிய அணைக்கட்டுகளை கட்டுவது, கேரளாவை போல ஆற்றுமணல் கடத்துபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற கேரள ஐகோர்ட் தீர்ப்பை தமிழகத்தில் நடைமறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment